Archives: அக்டோபர் 2024

மிகபெரிய பிளவு

புகழ்பெற்ற "பீனட்ஸ்" என்ற நகைச்சுவை இதழில், தி கிரேட் பம்ப்கின்  மீதான நம்பிக்கைக்காக 'லினஸ்' என்பவரின் நண்பர் அவரைத் திட்டுகிறார். விரக்தியுடன் விலகிச் சென்று, லினஸ் கூறுகிறார், “பிறருடன் ஒருபோதும் விவாதிக்கக் கூடாத மூன்று விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன்; மதம், அரசியல் மற்றும்  தி கிரேட் பம்ப்கின்!"

தி கிரேட் பும்ப்கின் என்பது லினஸின் கற்பனையில் மட்டுமே இருந்தது, ஆனால் மற்ற இரண்டு காரியங்கள் மிகவும் உண்மையானவை. அவை நாடுகள், குடும்பங்கள் மற்றும் நண்பர்களைப் பிரிக்கிறது. இயேசுவின் காலத்திலும் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. பரிசேயர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்களாகப் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை அப்படியே பின்பற்ற முயன்றனர். ஏரோதியர்கள் மிகவும் அரசியல் ரீதியானவர்கள், இருப்பினும் இரு பிரிவினரும் யூத மக்களை ரோமானிய அடக்குமுறையிலிருந்து விடுவிக்க விரும்பினர். இயேசுவுக்கோ அந்த நோக்கமில்லை, எனவே அவர்கள் அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டக் குறுக்குக் கேள்வியுடன் அணுகினர்: இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? (மாற்கு 12:14-15). இயேசு ஆம் என்று சொன்னால், மக்கள் அவரை வெறுப்பார்கள். அவர் இல்லை என்று சொன்னால், ரோமர்கள் அவரை கிளர்ச்சிக்காகக் கைது செய்யலாம்.

இயேசு ஒரு நாணயம் கேட்டார். "இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது?" என்று கேட்டார் (வ. 16). அது இராயனுடையது என்பது அனைவருக்கும் தெரியும். இயேசுவின் வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன: "இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்"  (வ. 17). அவருடைய முக்கியத்துவங்களைச் சீராக வைத்திருந்தார், இயேசு அவர்களின் பொறியைத் மேற்கொண்டார்.

இயேசு தம் பிதாவின் சித்தத்தைச் செய்ய வந்தார். அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி, நாமும் தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாகத் தேடலாம், எல்லா கருத்து வேறுபாடுகளிலிருந்தும் விலகி, சத்தியமானவரை நோக்கி கவனத்தைத் திருப்பலாம்.

அழகான ஓர் ஆச்சரியம்

உழப்பட்ட நிலத்தில் ஒரு ரகசியம் இருந்தது, ஏதோ மறைந்திருந்தது. அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, லீ வில்சன் தனது எண்பது ஏக்கர் நிலத்தைத் தனது மனைவி இதுவரை கண்டிராத மிகப் பெரிய மலா்கள் பூக்கும் தோட்டத்தை பரிசை வழங்குவதற்காக ஒதுக்கினார். அவர் ரகசியமாக எண்ணற்ற சூரியகாந்தி விதைகளை விதைத்திருந்தார், அது இறுதியில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளாக வெடித்தது, அவரது மனைவிக்குப் பிடித்தவை. சூரியகாந்திப் பூக்கள் தங்கள் மஞ்சள் கிரீடங்களை விரித்தபோது, ​​ரெனி லீயின் அழகான அன்பின் செயலால் திக்குமுக்காடி அதிர்ச்சியடைந்தார்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யூதாவின் மக்களிடம் பேசுகையில், தேவன் அவர்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களால் இப்போது காணமுடியாவிட்டாலும்,  அவர்கள் தமக்குச் செய்த துரோகத்திற்காக  அவர்களுக்கு எதிராக அவர் வாக்களித்த நியாயத்தீர்ப்புக்குப் பிறகு (ஏசாயா 3:1-4:1) ஒரு புதியதும் பொன்னானதுமான நாள் விடியும். "அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்." (4:2). ஆம், அவர்கள் பாபிலோனிய கைகளில் பேரழிவையும் சிறையிருப்பையும் அனுபவிப்பார்கள், ஆனால் ஒரு அழகான “கிளை" அப்போது தரையிலிருந்து ஒரு புதிய தளிராக வெளிப்படும். அவருடைய ஜனங்களில் மீதியாயிருப்பவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு  ("பரிசுத்தனென்று", வ. 4), சுத்திகரிக்கப்பட்டு (வ. 4), மற்றும் அவரால் அன்பாக வழிநடத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவார்கள் (வ. 5-6).

நம்முடைய நாட்கள் இருண்டதாகவும் தேவனுடைய வாக்குகளின் நிறைவேற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம்  ஆனால் விசுவாசத்தினால் நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது, ​​ஒரு நாள் அவருடைய "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும்" (2 பேதுரு 1:4) அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒரு அழகான புதிய நாள் காத்திருக்கிறது.

ஜெபிக்கும்படி இடைநிறுத்துங்கள்

மார்ச் 24, 2023 அன்று தனது வானிலை முன்னறிவிப்பின் போது மிசிசிப்பியில் உள்ள ஒரு வானிலை ஆய்வாளர், ஆறு எளிய மற்றும் ஆழமான வார்த்தைகளைப் பேசியதற்காகப் பிரபலமானார். மேட் லௌபன், கடுமையான புயலை ஆய்வு செய்துகொண்டிருந்தார், அமோரி நகரத்தை பேரழிவுகரமான சூறாவளி தாக்கப் போகிறது என்பதை உணர்ந்தார். அப்போதுதான் உலகமெங்கும் கேட்கப்பட்ட, "அன்புள்ள இயேசுவே, தயவுசெய்து அவர்களுக்கு உதவும். ஆமென்" என்ற ஜெபத்தை லௌபன் தொலைக்காட்சி நேரலையில் இடைநிறுத்தி ஜெபித்தார். அந்த ஜெபம்தான் தங்களைப் பாதுகாப்பாய் மறைத்துக்கொள்ள உணர்த்தியதாக சில  பார்வையாளர்கள் பின்னர் கூறினர். அவரது தன்னிச்சையான மற்றும் இதயப்பூர்வமான ஜெபம், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற உதவியிருக்கலாம்.

நம்முடைய ஜெபங்களும் மாற்றத்தை ஏற்படுத்தும். அவை நீளமாக இருக்க வேண்டியதில்லை. அவை குறுகியதாகவும் இனிமையாகவும் மற்றும் நாளின் எந்த நேரத்திலும் ஜெபிக்கக் கூடியதாக இருக்கலாம். நாம் வேலையிலிருந்தாலும் சரி, நேரமின்றி இயங்கிக்கொண்டிருந்தாலும் சரி அல்லது விடுமுறையிலிருந்தாலும் சரி, நாம் “இடைவிடாமல் ஜெபிக்கலாம்” (1 தெசலோனிக்கேயர் 5:17).

நாள் முழுவதும் நாம் ஜெபிப்பதைக் கேட்கத் தேவன் விரும்புகிறார். நாம் கவலைக்கும் பயத்திற்கும் அடிமைகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்முடைய எல்லா கரிசனைகளையும் கவலைகளையும் தேவனிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை அப்போஸ்தலன் பவுல் நமக்கு நினைவூட்டுகிறார்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலிப்பியர் 4:6-7).

நாம் ஒரு வறட்சியான நாளை அனுபவித்தாலும், அல்லது வாழ்க்கையின் உண்மையான அல்லது அடையாளப்பூர்வமான புயல்களால் தாக்கப்பட்டாலும், நாள் முழுவதும் இடைநிறுத்தி, ஜெபிக்க நினைவில் கொள்வோம்.

சுமைகளை அகற்றுதல்

கல்லூரியில், நான் ஒரு பருவ தேர்விற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்பைப் படித்தேன். வகுப்பிற்கு ஷேக்ஸ்பியர் எழுதிய அனைத்தையும் கொண்ட மாபெரும் பாடப்புத்தகம் தேவைப்பட்டது. புத்தகம் பல கிலோ எடையுள்ளதாக இருந்தது, நான் அதை ஒரே நேரத்தில் எடுத்துச் செல்ல  சில மணிநேரங்கள் தேவைப்பட்டது. அந்த சுமையைக் கட்டி சுமப்பது  என் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது, அது இறுதியில் என் புத்தகப்பையில் ஒரு உலோக இணைப்பையும் உடைத்தது!

சில விஷயங்கள் நம்மால் சுமக்க முடியாத அளவுக்கு கனமானவை. உதாரணமாக, கடந்த காலத்தில் உண்டான காயம் கொண்டுவருகிற உணர்வுபூர்மான சுமைகள், கசப்பாலும் வெறுப்பாலும் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால், பிறரை மன்னிப்பதாலும், முடிந்தால் அவர்களுடன் ஒப்புரவாவதின் மூலமாகவும் நாம் விடுதலை பெற்றிடத் தேவன் விரும்புகிறார் (கொலோசெயர் 3:13). ஆழமான காயம் ஆற, அதிகமான நேரம் ஆகலாம். பரவாயில்லை. தனது சேஷ்டபுத்திரபாகத்தையும் ,ஆசீர்வாதத்தையும் திருடியதற்காக யாக்கோபை மன்னிக்க ஏசாவுக்கு பல ஆண்டுகள் ஆனது (ஆதியாகமம் 27:36).

இருவரும் இறுதியாக மீண்டும் இணைந்தபோது, ​​​​ஏசா கருணையுடன் தனது சகோதரனை மன்னித்து, "அவனைத் தழுவினார்" (33:4). அவர்கள் இருவரும் கண்ணீர் வடிக்கும்வரை ஒரு வார்த்தை கூட பரிமாறிக்கொள்ளவில்லை. காலப்போக்கில், கொலை செய்யக்கூட தூண்டும் கோபத்தை ஏசா விட்டுவிட்டார் (27:41). அந்த ஆண்டுகளில், யாக்கோபு தனது சகோதரனுக்கு இழைத்த பொல்லாங்கு எப்பேர்பட்டது என்பதை உணர அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் இணைகையில், முழுவதும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்துகொண்டார் (33:8-11).

இறுதியில், இரு சகோதரர்களும் மற்றவரிடமிருந்து எதுவும் தேவைப்படாத நிலைக்கு வந்தனர் (வ. 9, 15). மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் மற்றும் கடந்த காலத்தின் கனமான சுமையிலிருந்து விடுபட்டு நடப்பது மட்டுமே போதுமானதாயிருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி

இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, மெதடிஸ்ட் பாடல் புத்தகத்தில் முதலாவதாக வைக்கப்பட்ட பாடல் சார்லஸ் வெஸ்லியால் எழுதப்பட்ட “ஓ ஆயிரம் நாவுகள் பாடுவதற்கு” என்ற பாடலே. “ஒருவருடைய மனந்திரும்புதலின் ஆண்டுவிழா” என்றே அப்பாடல் முதலாவது தலைப்பிடப்பட்டிருந்தது. இயேசுவின் மீதான அவரது நம்பிக்கையால் தூண்டப்பட்ட தீவிரமான புதுப்பித்தலை நினைவுகூரும் வகையில் இந்த பாடல் இயற்றப்பட்டது. மனந்திரும்பி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களுக்கு தேவனுடைய குணாதிசங்களின் மகிமையைப் பறைசாற்றும் பதினெட்டு வரிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

அத்தகைய நம்பிக்கை கொண்டாடத் தகுந்தது; பகிர்ந்து கொள்ளத்தக்கது. 2 தீமோத்தேயு 2ல், பவுல் தீமோத்தேயுவை தனது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவும், அதைப் பகிர்ந்து கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும் ஊக்குவிக்கிறார். மேலும், “இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்” (வச. 8-9) என்று குறிப்பிடுகிறார். அவருடைய தெரிவுகளை இரண்டாவதாக யூகிப்பதற்குப் பதிலாக, பவுல் தீமோத்தேயுவுக்கு “தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்” (வச. 8) என்று சுவிசேஷத்தை நினைப்பூட்டுகிறார். அவர் ஆளுகை செய்வதற்காக அல்ல, ஊழியம் செய்வதற்காகவே வந்தார்; நாம் சமாதானமாய் இருக்கும்பொருட்டு உலகத்தின் பாவங்களுக்காய் அவர் மரித்தார். மரணம் ஜெயங்கொள்ளவில்லை. இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார்.

மேலும் அது நம்பிக்கை கொண்டவர்களை விடுதலையை பெறுவது போல், அதின் செய்தியும் கட்டுப்பட்டு இருக்கவில்லை. சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், கல்லறைகள் போன்று மரணம் தன் ஆளுகையை செயல்படுத்தும் இடங்களில் கூட, “தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை” (வச. 9) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவில் அனைவருக்கும் நம்பிக்கை துளிர்விடுகிறது. அந்த செய்தி கொண்டாட்டத்திற்கு உகந்த செய்தி! 

 

ஜெபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது

“நான் ஐம்பது ஆண்டுகளாக உங்களுக்காக ஜெபம் செய்கிறேன்,” என்று வயதான பெண் ஒருவர் கூறினார். என் நண்பன் லூ அவருடைய கண்களை ஆழ்ந்த நன்றியுடன் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாய் தனது தந்தை வளர்ந்த பல்கேரிய கிராமத்திற்குச் சென்றிருந்தான். இயேசுவின் விசுவாசியான அந்தப் பெண், அவருடைய தாத்தா பாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தார். ஒரு கண்டத்திற்கு அப்பால் தொலைவில் லூவின் பிறப்பைக் கேள்விப்பட்ட உடனேயே அவள் லூவுக்காக ஜெபிக்க ஆரம்பித்தாள். இப்போது, அரை நூற்றாண்டுக்குப் பிறகு, அவர் ஒரு வணிகப் பயணமாக கிராமத்திற்குச் சென்றிருந்தான். அங்கு அவன் தனது நம்பிக்கையைப் பற்றி ஒரு குழுவிடம் பேசினான். ஏறக்குறைய முப்பது வயது வரை லூ இயேசுவின் விசுவாசியாக மாறவில்லை. இந்த வயதான தாயார் அவனை அணுகியபோது, அவன் இரட்சிக்கப்படுவதற்கு அவரது தொடர்ச்சியான ஜெபங்கள் அவன் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அவன் ஆச்சரியப்பட்டான்.

பரலோகத்தின் இந்தப் பக்கத்தில் நாம் ஏறெடுக்கும் ஜெபங்களின் முழு விளைவை நாம் ஒருபோதும் அறிய மாட்டோம். ஆனால் வேதம் நமக்கு இந்த அறிவுரையை அளிக்கிறது: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்” (கொலோசெயர் 4:2). கொலோசே என்ற சிறிய பட்டணத்தில் உள்ள விசுவாசிகளுக்கு பவுல் இந்த வார்த்தைகளை எழுதியபோது, அவர் எங்கு சென்றாலும் தேவன் தனது செய்திக்காக வாசலை திறந்தருளும்படிக்கு (வச. 4) ஜெபிக்கும்படியாய் கேட்கிறார்.

சில நேரங்களில் நாம் நினைக்கலாம், ஜெபம் என்ற ஆவிக்குரிய வரம் என்னிடம் இல்லை. ஆனால் வேதாகமத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவிக்குரிய வரங்களிலும் ஜெபம் இடம்பெறவில்லை. ஒருவேளை இதற்குக் காரணம், தேவன் கிரியை நடப்பிப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையாக ஜெபிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். 

 

கிறிஸ்துவில் ஒன்றாக இருப்பது சிறந்தது

டாக்டர் டிஃப்பனி கோல்சன் தனது சிறிய அமெரிக்க நகரமான இல்லினாய்ஸில் இருக்கும் ஈஸ்ட் செயிண்ட் லூயிஸில் பல வழிகளில் குற்றச் செயல்களின் தாக்கத்தைக் கண்டார். இருப்பினும், 2023 ஆம் ஆண்டில், நகரம் கொலைகளில் 31 சதவிகிதம் வீழ்ச்சியையும், ஒட்டுமொத்த குற்றங்களில் 37 சதவிகித வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. என்ன நடந்தது? ஒரு கூட்டு முயற்சி. நகரின் பொதுப் பாதுகாப்பு அமலாக்கக் குழுவானது, மாநில மற்றும் நகர காவல்துறை, நகரப் பள்ளி மாவட்டம் மற்றும் நம்பிக்கை அமைப்பு உட்பட அனைத்தும் குடிமக்களுக்கு ஆதரவாக இணைந்து செயல்பட ஆரம்பித்ததே அதற்கு காரணம்.

“இது ஒரு திருமணம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று டாக்டர் கோல்சன் கூறினார். நகர கூட்டாளிகளின் அனைத்து உறுப்பினர்களும் குடிமக்களுக்கு உதவ ஒன்றாக இணைந்தனர். அவர் வழிநடத்தும் பள்ளியின் ரேபரவுண்ட் வெல்னஸ் சென்டர், குற்றம் அல்லது விபத்துகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக பள்ளி சமூக சேவகர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கியது. மற்ற ஏஜென்சிகள் தங்கள் தோ்ச்சிப் பெற்ற உதவியை பகிர்ந்து கொள்கின்றன. தெருவில் உள்ளவர்களுடன் அதிகம் பேசவும், கேட்கவும் காவல்துறை உறுதியளிக்கிறது.

சங்கீதக்காரனாகிய தாவீது “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” (சங்கீதம் 133:1) என்கிறார். மேலும் ஒருமித்து வாசம்பண்ணுவது “எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது” (வச. 3) என்று ஒப்பிடுகிறார். தேவன் மீது ஒருங்கிணைக்கும் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் மக்களை தாவீது குறிப்பிடுகிறார். கொள்கைகள் அல்லது அரசியலால் பிரிக்கப்பட்டாலும் நாம் ஒன்று தான். இது குழப்பமாய் தெரியலாம், ஆனால் ஆசீர்வாதமான ஒன்று. கிறிஸ்தவ அன்பு தேவைப்படும் நாம் வாழும் ஊர்களில், ஒருவருக்கொருவர் அன்பு காண்பிக்கவேண்டியது விசுவாசிகளின் அழகான இலக்காய் அமைந்திருக்கிறது.